அன்பே கடவுள் என்பது கேள்வி
ஏன் கடமையே கடவுள் இல்லை? ஏன் ஒழுக்கமே கடவுள் இல்லை?
ஏன் பண்பே கடவுள் இல்லை? ஏன் திறனே கடவுள் இல்லை?
ஏனென்றால் நாம் அன்புக்காக அளித்த வரையறை!
அன்பு என்றால் அது அறிவு கேளாது, ஒழுக்கம் பாராது, பண்பு தேடாது….
கேவலமாயினும் அவலமாயினும் அன்பு அணைப்பும் தரும் அடைக்கலமும் தரும்…
அதுதானே நாம் எதிர்பார்க்கும் அன்பு! இல்லாவிட்டால் நாம் அன்பையே கேவலப்படுத்திவிடுவோமே!
அன்பின் பேரில் தானே நாம் எல்லாவித அட்டுழியங்களும் செய்கிறோம்?
வன்முறைதானே நாம் அன்பின் பெயரால் பரிமாறுவது….
நாம் எது செய்தாலும் கடவுள் நமக்கு மட்டும் கருணை காட்ட வேண்டும்….
கடவுளிடமும் அதைப்போன்ற அன்பையே அல்லவா எதிர்பார்க்கிறோம்….
அதனால்தானே அன்பே கடவுள் என்றோம்…..
இல்லையென்றால் அன்பு எப்படி கடவுளாகும்?
நாம் எப்போதும் கடவுளை கடமையாய் காண்பதே இல்லை!
கடமை அறிவும் ஒழுக்கமும் அதிகாரத்துடன் கேட்கும். திறனை எதிர்பாக்கும்.
அக்குணங்களில்லாமல் கடமை மடைமையாக மாறிவிடும்.
ஆனால் கடமை இல்லாமல் இந்த உலகம் மட்டுமல்ல மொத்த பிரபஞ்சமே இயங்காதே!
நாம் எப்போதும் கடவுளை ஒழுக்கமாய் காண்பதே இல்லை!
நாம் எப்போதும் கடவுளை பண்பாய் காண்பதே இல்லை!
நாம் எப்போதும் கடவுளை திறனை காண்பதே இல்லை!
ஒழுக்கம் கடினம். பண்பு கடிது. திறன் உன்னதம்.
இவற்றில் எல்லாம் கடவுளை காணவில்லையென்றால், அன்பில் மட்டும் ஏன் கடவுள்?
ஏனென்றால் இது நாமே நம் சுய நலத்திற்காகவே உண்டாக்கிய அன்பும் கடவுளும்!
இறைவன் அன்பில் மட்டும் இல்லை…. ஒவ்வொரு உணர்விலும்!
ஆனால் உருவமாயும் அருவமாயும் இல்லாமல்,
இறைமையாய்…
அண்டம் முழுதும்… ஒவ்வொரு உயிர்த்துளியிலும்…
அணுவிலும் அகண்டத்திலும்… சிறு கல்லிலும் பெரு மலையிலும்
அன்பே கடவுள் இல்லை….. அது முரண்.
இறைமையே எல்லாம்!