நல்லது பண்ணலாமா?

“லூசு மாதிரி ஆரம்பிக்காதீங்க எண்ணத்தையாவது? அதது அதுக்கேத்தபடி இருந்தாத்தான் மரியாதை!”.. வழக்கம்போல என் மனைவியின் அர்ச்சனை.

புன்னகையுடன் தலையாட்டினேன். வேறென்ன செய்ய முடியும்? எப்போதும் அவள் திட்டினால் அப்பபோதைக்குத் தலையாட்டுவேன். பின்னே நான் என்ன நினைத்தேனோ அதை எப்படியும் செய்துவிடுவேன். அதுக்கும் ஒரு அர்ச்சனை கிடைக்கும் ” என்னவோ போங்க உங்களுக்கெல்லாம் அனுபவிச்சாதான் மண்டையிலே ஏறும் ” னு. ஆனா எனக்கு வாய்த்த மனைவி நல்லவதான். அர்ச்சனை கொடுத்தாலும் நான் செய்கிற காரியங்களுக்கு எல்லாம் துணையிருப்பாள். என்னை விட்டுக்கொடுக்கவே மாட்டாள்.

அப்படித்தான் ஒரு நாள் ஆரம்பித்தேன் “ வாழ்க்கையிலே என்ன இருக்கு என் சகதர்மிணியே! ஏழு தலைமுறைக்கு சொத்து அப்படி இப்படின்னு சம்பாதிக்கிறதை எல்லாம் சேர்த்து பூட்டி வச்சு என்ன பண்ணப்போறோம்! நாம் வாழும்போதே நம் கூடவே நம்மைச் சுத்தி நமக்கு உதவியாய் இருக்கிறவங்களுக்கு ஏதாவது செய்தால் மனதுக்கு இதமாயும் ஒரு அர்த்தமும் கிடைக்கும். என்ன சொல்றே?”

அப்படியே என்னை ஒரு மாதிரி பார்ததாள் என் சகதர்மிணி. இப்ப என்ன புதுசான்னு ஒரு குழப்பமான, பதட்டமான பார்வை. எனக்குத் தெரியும் அடுத்து என்ன வரும் என்று. அதனால் அவசர அவசரமாக “ இரு… இரு… அப்படிப் பார்க்காதே! நான் என்ன சொல்ல வரேன்னா, நமக்கு வர பணத்திலே குறைஞ்சது ஒரு பத்து இருபது பர்செண்ட் நமக்கு பல விதத்திலே உதவியா இருக்கிற டிரைவர் , வேலைக்காரம்மா, வாட்ச்மேன், தோட்டக்காரர் அது மாதிரி ஆளுங்களுக்கு ஏதாவது பண்ணாலாம்னு நினைக்கிறேன். உதாரணத்திற்கு, அவங்க குடும்பத்துக்கு மெடிகிளெய்ம் இன்சூரன்ஸ் எடுக்கலாம் இல்லே அவங்க பசங்க படிப்பு செலவை முடிஞ்ச அளவு எடுத்துக்கலாம். அவங்க இருக்கிறதுக்கு சிள்ள ப்ளாட் வாங்கி குறைஞ்ச வாடகைக்கு கொடுக்கலாம் இது மாதிரி பல செய்யலாம்…”

இதைக் கேட்டதும் பக் பக்னு சிரித்தாள் சகதர்மிணி. அவ சிரிக்கும்போது உடம்பே ஒரு மாதிரி குலுங்கும். சில சமயம் அந்த சிரிப்பு நம்மையும் தொத்திக்கும். ஆனா பல சமயம் எரிச்சல்தான் வரும். ஏதோ கிண்டல் பண்ற மாதிரியே இருக்கும். “ ஏண்டி இப்படி சிரிக்கிறே ” ன்னா, “ஆமா! அழுதாதான் தப்பு சிரிச்சா நல்லதுதானே – அதுக்கென்ன இப்படி அப்படின்னு “ன்பாள்.

“ இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இப்படி சிரிக்கிறே?”

அப்பத்தான் சொன்னாள் “லுசு மாதிரி.. ” இக்கதையின் முதல் வரி.

எனக்கு வழக்கத்துக்கு மாறாய் கோபம் வந்து விட்டது ” இதிலே என்னடி லுசத்தனம் இருக்கு! நல்லதுதானே பண்ணச் சொல்றேன். காசு செலவாகுமேன்னு பயப்படறியா?”

“அட என்னங்க நீங்க! நான் காசைப் பத்தியெல்லாம் கவலைப்படலை. நீங்க சொல்றவங்களுக்கு இது மாதிரி எல்லாம் செய்யாம அதிகமா கையிலே காசு கொடுத்தாதான் சந்தோசப்படுவாங்க. இந்த மெடிகிளெய்ம், ஸ்கூல் பீஸ் , குறைந்த வாடகை இதெல்லாம் பாராட்ட மாட்டாஙக. அதன் மதிப்பும் அவர்களுக்கு புரியவே புரியாது. அதை குறையா சொன்னாக்கூட ஆச்சரியமில்லை”

“நீ தான் லூசு மாதிரி பேசறே! கையிலே காசு கொடுத்தா உடனே செலவு செய்துடுவாங்க! நான் சொல்ற திடடமெல்லாம் அவங்களுக்கு ஒரு நீண்ட கால பாதுகாப்பு தானே. அது பெட்டர் இல்லையா?”

“ அதெல்லாம் பேச்சுக்குத்தான் உதவும். நீங்க வேணும்னா பெருமைப்பட்டுக்கல்லாம் அவங்களுக்கு நீங்க சொல்ற திட்டம் எல்லாம் புரியாது. அவங்களுக்கு அது தேவையும் கிடையாது. நம்ப கலைஞரை பாருங்க. அவர்தான் அவங்களை நல்லா புரிஞசு வச்சிருக்கார். நீண்ட கால திட்டமெல்லாம் போட்டு அதை மக்களு்ககு புரிய வைக்க கஷ்டப்பட்டு கடைசியா நிறைய நல்லது பண்ணியும் எலெக்சன்லே தோக்கிறதை விட கையிலே இலவசமா பொருளா கொடுத்தாதான் ஓட்டுன்னு. இதைப் பாருங்க! அவங்க சம்பாதிக்கிறதை வச்சு தினசரி வாழக்கையை நடத்தவே கஷ்டப்படறவங்க. அதனால நீங்க கொடுக்கணும்னு நினைக்கிறதை காசாவோ பொருளாவோ அதுவும் வாரி இறைக்காம அளவா கொடுங்க. அதுதான் அவங்களுக்கு பயன்படும்

நான் பிடிச்ச முயலுக்குத்தான ஓரு காலாச்சே (என் முயல் அதன் கால் அதனாலே முணு கால்னு சொல்றது தேவையே இல்லை) , பயங்கரமா த்ததுவமெல்லாம் பேசி, கீதையிலிருந்து மேற்கோள்களெல்லாம் காட்டி(உளறி) அவளை சம்மதிக்க வைத்தேன். “ என்னமோ போங்க! பட்டுத்தான திருந்துவேன்னா நான் என்ன சொல்றது? ன்னு” சொல்லிட்டு என் மண்டையிலே ஒரு தட்டு(செல்லமாகத்தான்) தட்டிவிட்டு காபி கொண்டுவர போனாள்.

அடுத்த முணு மாதம் பிரமாதமாக திட்டம் போட்டேன். யாரும் சுலபத்தில் செய்யாததை நடைமுறையாக்கப் போகிறோம்னு மனசில் அப்பொப்ோ ஒரு நெகிழ்ச்சி வரும். கல்கியிலே பேட்டி வருவதாகக் கூட கனவு வந்தது.

ஒரு 400 சதுர அடி ப்ளாட் வாங்கி 2000 ருபாய் வாடகை வர இடத்திலே 1000 ருபாய்ககு என் டிரைவருக்கு கொடுத்தேன். அப்பொழுது அவன் கண்ணிலே தெரிஞ்ச நன்றி உணர்வைக் கண்டு பெருமிதமாக சகதர்மினியைப் பார்ததேன். அவள் தன் தோளை குலுக்கவிடடு கடைசியிலே என தலைதான் உருளும் வாடகை வீட்டிலே தண்ணி வரல்லே பயங்க கரண்ட் கட் , குடித்தனக்காரங்க சரியில்லை, இந்த மாசம் வாடகை கொடுக்க முடியிலேன்னு என் கிட்டதான் சொல்லுவாங்க. கடைகியிலே சார் எடுத்துகோன்னு கட்டாயப்படுத்தினதாலதான் இந்த வீட்டுக்கே குடி வந்தன்னு புலம்பப்போறாங்க. நல்லா வாங்கி கட்டிக்கங்க” ன்னு சொல்லிட்டு உடம்பு குலுங்க சிரித்தாள். என் எரிச்சல்தான் அதிகமாகியது.

அதே மாதிரி என் டிரைவர், தோட்டக்காரர், வேலைக்காரம்மா குடும்பத்துக்கும் மெடிக்ளைம் இன்சுரன்ஸ் எடுத்தேன். ஒவ்வொரு வருடமும் சம்பளத்தோடு ஒரு மாதம் லீவு கம்பெனி மாதிரி கொடுத்தேன் ஒவ்வொரு தீபாவளிக்கும் புது துணிகளோடு போனஸ் கொடுத்தேன் போனஸ் ஒரு மாத சம்பளம் இதையெல்லாம் முறையாக செய்ய பேங்கில் வட்டி வரும்படி பணத்தை போட்டு வைத்தேன்.

யோசித்துப் பாருங்க! நீங்க இதுமாதிரி முறையா ஏதாவது செய்து இருக்கிறீர்களா? அல்லது யாராவது உங்களுக்கு தெரிஞ்சவங்க இதுமாதிரி செய்திருக்கிறார்களா நான் ஒரு சாதாரண ஓரளவுக்கு நல்ல மாத சம்பளம் வாங்கும் குடும்பஸ்தன் பெரிய தொழிலதிபரோ, பரம்பரை பணக்காரனும் இல்லை. என் எண்ணமெல்லாம் என் அடுத்த தலைமுறைக்கு செய்ய வேண்டியதை முறையாகவும் எனக்கும் என் சகதர்மினிக்கும் வயசான காலத்தில் நிம்மதியாக வாழவும் வழி செய்து விட்டு, மிச்சம் இருக்கும் உபரி பணத்தை நான் பார்க்கவே முடியாத ஏழு தலைமுறைக்கு பூட்டி வைப்பதை விட என் கூடவே இருந்து என் நிகழ்கால வாழ்க்கையை நிம்மதியாகக் கழிக்க உதவும் மக்களுக்கு பயன் படுத்தினால் என்ன என்பதுதான். இது ஒரு தப்பா? என் கேரக்டரையே யாரும் புரிஞ்சுக்கலையேன்னு தான் என் வருத்தம்.

என் சகதர்மிணி அவ்வப்போது அவளுக்கே உரிய கேலி சிரிப்புடன் கிண்டல் செய்தாலும், இதையெல்லாம் செய்ய எனக்கு எப்பொழுதும் துணையாய் இருந்தாள். எல்லா கணக்குகளையும் அவள் தான் பார்த்துக் கொண்டாள்.

முதல் பிரச்சனை ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று வேலைக்காரம்மா மூலம் வந்தது.சம்பளம் உயர்த்திக் கேட்டாள். அடுத்த வருடம் பார்க்கலாம் என்றாள் என் சகதர்மினி. டீசல், பெட்ரோல் விலை எல்லாம் ஏறிடுச்சுன்னு ஆட்டோகாரர்கள் மாதிரி ஏதேதோ காரணங்கள் சொன்னால் சொர்ணம்மா (எங்கள் வேலைக்கார அம்மாவின் பெயர் ). உடனே ஒரு பட்டியல் போட்டு சம்பளத்தை தவிர நாங்க என்னென்ன சலுகைகள் தருகிறோம் என்றும் அந்த சலுகைகளை கணக்குப் பார்த்து கூட்டினால், உண்மையான சம்பளம் எவ்வளவு அதிகமாக இருக்கும் என்று என் மனைவி சொன்னாள்.

அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்த நான், ஆஹா! நமக்கு ஐயா இவ்வளவு சம்பளம் தருகிறார் என்று ஆச்சரியப்படுவாள் சொர்ணம்மா என்று ஆவலாக எட்டிப்பார்த்தேன்.

ஆனால் சொர்ணம்மா அந்தப் பட்டியலை ஆராய்ந்து கொண்டிருந்தாள் “என்னம்மா இது? என்னமோ இன்சூரன்ஸ் எழுதி இருக்கீங்க?” என்று கேட்டாள். என் மனைவி அதை விளக்கிச் சொன்னதும் ” ஐயா எங்க பேரிலே பணம் கட்டிட்டாராம்மா? அதை இன்சூரன்ஸ் கம்பெனி எனக்கு எப்போ கொடுக்குமா?”

“சொர்ணம்மா! பணம் எல்லாம் உன் கையில் கொடுக்க மாட்டாங்க உனக்கு உடம்பு முடியாம ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி ஆயிட்டேன்னு வச்சுக்கோ அந்த செலவு முழுவதும் இன்சூரன்ஸ் கம்பெனியே ஹாஸ்பிடலுக்கு கொடுத்திடும்”.

“என்னம்மா இது? சரி. நான் ஆஸ்பிடலுக்கு போகலைன்னா?”

“அப்பவும் உன்கிட்ட எதுவும் தர மாட்டாங்க உன் பேர்ல கட்டின பிரீமியம் பணத்தை அவங்களை வச்சுப்பாங்க.”

“இது என்னம்மா அநியாயம்? எனக்கெல்லாம் உடம்புக்கு எதுவும் வராதும்மா . ஆஸ்பத்திரிக்கு எல்லாம் போய் படுக்க மாட்டோம். என்னமோ சொன்னிங்களே பிரீமியம் அது என் சம்பளம் தானேம்மா. அதை ஏன் இன்சூரன்ஸ் கம்பெனிக்கு தாரைவார்க்கிறீங்க , என்கிட்டயே கொடுத்துடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும்.”

அதுக்குப் பிறகு சொர்ணம்மா சொன்னது தான் எனக்கு அதிர்ச்சி, என் மனைவிக்கு உடம்பு குலுங்கும் சிரிப்பு.

“ஐயா இதெல்லாம் தெரிஞ்சி தானே செய்றாரு ஏம்மா படிச்சவரு தானே! பெரிய ஆபிஸர் வேறு! இப்படி ஏமாந்து போய் பணத்தை வேஸ்ட் பண்றாரு! இன்சூரன்ஸ் கம்பெனிக்கு ஏம்மா எங்க சம்பளப் பணத்தை குடுக்கிறாரு? அதை இனிமேல் எனக்கு கொடுங்க சரியா?” சொர்ணம்மாள் தலையில் அடித்துக்கொண்டு ஹாலை பெருக்க ஆரம்பிக்கிறாள் அந்த ஞாயிறு என் சகதர்மிணியின் ஆனந்த நாள். அவள் சிரித்து சிரித்து என்னை வெறுப்பேற்றிய நாள்.

இதோட போயிடும்னு நான் நெனச்சது தப்புன்னு சீக்கிரமே புரிந்தது .

என் தோட்டக்காரருக்கு ஒரு பிரச்சனை. அவருடைய தீபாவளி போனஸ் வருடத்தில் ஒருமுறை வருவதுதான் அவர் குறை. என் மனைவி பொறுமையாக தீபாவளி என்றால் என்ன? அதை எப்போதெல்லாம் வரும் போனஸ் என்றால் என்ன ? என்றெல்லாம் விளக்கிக் கொண்டிருந்தாள். அவருக்கு திடீரென கோபம் வந்துவிட்டது. “தாயீ! என் சம்பள பணத்தை மாசாமாசம் கொஞ்சம் கொஞ்சம் பிடிச்சு வச்சுக்கிட்டு அதையே தீபாவளி அன்னிக்கு மொத்தமா கொடுக்கிறாரே ஐயா! என் பணத்தை வட்டிக்கு விட்டு ஐயா புரட்டுகிறாரா அதெல்லாம் வேணாம் தாயி எதையும் பிடிக்க வேண்டாம் என் பணத்தை மாசாமாசம் எதையும் பிடிக்காமல் அப்படியே கொடுக்க சொல்லுங்க நான் வரேன்” அவர் பாட்டுக்கு துண்டை விசிறிவிட்டு போயிட்டார். நான்தான் அந்த வாரம் முழுவதும் வெந்தேன் காதில் இன்னும் என் சகதர்மிணியின் சிரிப்பு.

இதெல்லாம் நடந்து ஒரு வருடம் போயிருக்கும் அன்று மாலை ஆபீஸிலிருந்து வீட்டுக்குள் நுழையும் போதே ஏதோ பிரச்சனை என்று புரிந்து விட்டது என் மனைவி வழக்கத்திற்கு மாறாக நான் உள்ளே நுழைந்ததும் “வாரும்! வாரும்!” என்றாள். அவள் பேச்சு கிண்டலா இல்லை கோபமா என்று புரியவில்லை ஆனாலும் ஏதாவது சொல்லவேண்டும் என்று “வந்தேன்! வந்தேன்!” என்று முனகிக்கொண்டே சிரிக்க முயன்றேன்.

அவள் தலையில் அடித்துக்கொண்டு எதுவும் பேசாதீங்க என்று சைகை காண்பித்துக் கொண்டே என் கையை பிடித்து என் ரூமுக்குள் அழைத்துச் சென்றாள்

உள்ளே நுழைந்ததும் “என்ன ஆயிற்று?” என்றேன்.

என்னை கோபமாக பார்த்தாள். “என்ன நடக்கிறது என்று புரியுமா உங்களுக்கு?” என்றாள்

“சொன்னால்தானே புரியும்” என்றேன் நானும் கோபத்துடன்.

“இந்த கோபத்திற்கு ஒன்னும் குறைச்சலில்லை பிரச்சனை நம்ம டிரைவர் மதன் தான் இவ்வளவு நாளா மரியாதையோடு அந்த மனிதனை நல்லபடியா வேலைக்கு வெச்சுருக்கோம். எவ்வளவோ நல்லது பண்ணி இருக்கோம் இவ்வளவு கேவலமா இருப்பான்னு நினைக்கவே இல்லை எல்லாம் உங்களால்தான்” என்று பொரிந்தாள்.

“இப்ப என்ன ஆச்சுனு இப்படி குதிக்கிற? விஷயம் என்னன்னு சொன்னாத்தானே புரியும்”

“புரிஞ்சா மட்டும் கிழிச்சிடுவிடுவீங்களா ? இதை பாருங்க. இனிமேல் மதன் இங்கே வேலைக்கு வரக்கூடாது. அவ்வளவுதான்”

“ என்ன இது? தலையும் புரியாமல் காலும் புரியாம!. என்னதான் நடந்தது சொல்லேண்டி”

“வேற என்ன நடக்கணும்? மதனோட பொண்டாட்டிக்காகத்தான் நீங்க பிளாட் வாங்கி குறைந்த வாடகைக்கு தந்தீங்களாம். அந்த நன்றிகெட்ட மடையன் கல்யாணம் பண்ணின நாளிலிருந்து தினம் அவளை சந்தேகப்பட்டு யார் யார் கூடவோ சேத்து வச்சு திட்டிக்கிட்டு இருப்பானாம். அவ எதேச்சையா உங்க நல்ல மனசை பத்தி சொல்லப்போக போன வாரத்தில இருந்து இது மாதிரி சொல்லி திட்ட ஆரம்பிச்சானாம். அவன் கூட சண்டை போட்டுவிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போயிட்டாளா எனக்கு உடம்பெல்லாம் பதறுது அவனை மட்டும் பார்த்தேன் செருப்பாலேயே அடிப்பேன்”

எனக்கு அப்படியே தலை சுற்றியது கோபமா, குழப்பமான்னு என்று புரியாம நெஞ்செல்லாம் அடைக்குது வார்த்தையே வரவில்லை.

“ என்ன என்ன சொல்றே நீ? விளையாட்டா பண்றே? அப்படியே போட்டேன்னா தெரியும்”

“என்னை போடாதீங்க. அந்த மடையனே நாலு சாத்தி நாக்கை புடுங்குற மாதிரி கேட்டு, அவனை வேலையை விட்டு உடனே நிப்பாட்டுங்க” கோபமாக பொரிந்து கொண்டே இருந்தவள், திடீரென என் மேல் சாய்ந்து “உங்களைப் போய் இப்படி கேவலப்படுத்திட்டானே! எனக்கு தாங்கலையே” ன்னு அழ ஆரம்பித்தாள்.

எனக்கு திடீரென ஒரு சலிப்பு ஏற்பட்டது. இது மாதிரி பேச்சுக்களை கேட்கவா மனைவி பேச்சையும் மீறி எல்லோருக்கும் நல்ல வசதிகள், சலுகைகள் என்று பணத்தையும் நேரத்தையும் வீணடித்தோம். என் மனைவி அதுவரைக்கும் அழுது நான் பார்த்ததே இல்லை அது வேறு கோபத்தை ஏற்படுத்தியது. ஒரு மாதிரி என்னை சமாளித்து கொண்டு அவளை கேட்டேன் “நம்ம மதனா இப்படி? என்னாலே நம்பவே முடியலையே? சரி உன்னிடம் யார் சொன்னது? மதன் எங்கே?”

தன் கண்ணைத் துடைத்துக் கொண்டே “அவனா? காலையிலேயே உடம்பு சரியில்லைன்னு வீட்டுக்குப் போயிட்டான் கொஞ்ச நேரம் முன்னால தான் அவன் பொண்டாட்டி போன் செஞ்சு அழுதுகிட்டே சொன்னால் ,இனிமேல் அவன் கூட சேர்ந்து வாழ மாட்டாளாம் அந்த தடியன் எங்கேயாவது கிடப்பான் இனிமே எனக்கு மட்டும் என்ன? அவன தலையை முழுகியாச்சு” என்றாள்.

இந்தப் பிரச்சனையை எப்படி தீர்த்து வைப்பது என்று குழப்பமாக இருந்தது பெரிதாக ஒரு சோர்வு வந்து மனதையும் உடம்பையும் தாக்கியது. அப்படியே சரிந்து கட்டில் மேல் உட்கார்ந்தேன். என் மனைவி காபி கொண்டு வந்து கொடுத்தாள். இனிமேல் என்ன என்பது போல் மௌனமாக பார்த்தாள்.

சற்று நேரம் கழித்து அவளிடம் கேட்டேன் “உண்மையிலேயே மதனுக்குள் இப்படி ஒரு கேவலமான உருவம் இருக்குன்னு நம்பவே முடியல்லை, நாளை அவன் தம்பியிடம் பேசுகிறேன். ஆனால் ஒன்னு! நான் நல்லது நினைக்க போக இப்படி ஒரு அபவாதம் வரும்னு நான் நினைக்கவே இல்லை. எனக்கு ஒன்னும் புரியவில்லையடி. இந்தப் பிரச்சினையில் நிறைய பேரு அடிபட்டுருக்காங்க. உன்னையே அழ வைச்சிட்டானே. ஆமா இதுல யார் பாவம்.?

என் மனைவி யோசிக்கவே இல்லை “மதனோட பொண்டாட்டிதான். எதிலும் நேரடியா ஈடுபடாம பழி அவதான் சுமக்கிறா. ஆநா அதற்கு காரணம் நீங்கதான் உதவி செய்யுங்க. ஆனா முறையா யாருக்கு எப்படி எவ்வளவு செய்கிறோம்னு யோசிச்சு செய்யுங்க. கண்ட கண்ட புத்தகங்களை படிக்கிறது. உடனே நான் அவனைப் போல வாழப் போறேன் இவனைப் போல செய்யப் போறேன்னு எதுலயாவது இறங்கி அடி வாங்குகிறது. கேட்டா உனக்கு என்ன தெரியும் என்று பிலாக்கணம் வேற! கொஞ்சம் மனைவியின் பேச்சையும் கேளுங்க. உருப்படுவீங்க!”

நான் என்ன சொல்றது? வழக்கம் போல தலையாட்டினேன். எனக்கு யாராவது தெளிவா சொல்லுங்களேன். என் எண்ணங்கள் தவறா ?என் மனைவி சொல்றதுதான் சரியா

Share Article :

1 thought on “நல்லது பண்ணலாமா?”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *