பராசக்தி சிரித்தாள்

சிவன் அவளை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்த்தார். என்னாயிற்று என்பது போல் புருவத்தை சற்றே உயர்த்தினார்.

பராசக்தி மீண்டும் புன்னகைத்தாள்.

“எனக்கு மீண்டும் ஒரு முறை மனித ஜன்மம் எடுக்க வேண்டும்” என்றாள்.

“என்ன? விளையாடுகிறாயா பார்வதி?”

“உங்களிடம் நான் விளையாட முடியுமா? உங்களிடம் என் வேண்டுகோளைத்தான் சொல்கிறேன்” என்று கெஞ்சலுடன் அவரைப் பார்த்தாள் பார்வதி.

“ஏன் இப்போது திடீெரன்று இப்படி ஒரு ஆசை?”

“என்னிடம் வரும் பக்தர்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய சிலைரத் தவிர மற்றவர் அனைவரும் தங்கள் கஷ்டங்கள் தீரவும் இன்பம் வேண்டியுமே வருகிறார்கள்! அனைவருக்குமே பொருள் மேலும், புகழ் மேலும், பதவி மேலும்தான் ஆசை. அதிலும் பலருக்கு மற்றவர் தாழ்ந்து அவர்கள் மட்டுமே உயர வேண்டிய விபரீத ஆசை! அது எனக்கு விந்தையாகவும் வேதனையாகவும் இருக்கிறது”

சிவன் சிரித்தார் “உன்னால் அவர்கள் கஷ்டங்கள் தீரவில்லை என்றால் உன்னை ராசியில்லாத அம்பாள் என்று சொல்லி உன் கோயிலை புதர் படர விட்டுவிட்டு வேறொரு கோயிலுக்கு போய்விடுவார்கள்” என்றார்.

“அது எப்படி? எல்லாவற்றிலும், எந்தக் கோயிலிலும் என் சொரூபம்தானே?”

“அதுதான் உலகம். அப்படித்தான் மக்கள். அவர்கள் கர்ம வினைகள் தீரும்வரை அவர்களின் பற்றும் தீராது ஆசையும் அடங்காது. அதனால் எங்கு பலன் கிடைக்கிறதோ அங்குதான் அவர்கள் பக்தியும் வெளிப்படும்”

பராசக்தி இப்போது மீண்டும் புன்னகைத்தாள் “அதிலும் பாதிப்பேர்கள் என்னைத் தங்களிடம் தூது போக வேண்டுகிறார்கள். ஊம்! நம் பிள்ளைகளுக்கே என்னால் தங்களிடம் தூது வர முடிந்ததில்லை…” பார்வதியே ஆனாலும் கணவரை சமயம் வரும் போது இடித்துக்காட்டாமலிருக்க முடியாது போலிருக்கிறது.

சிவன் அதைக் கவனியாயது போல் சிரித்தார் “சரி! அதற்காக இப்போது மனித ஜன்மம் எடுக்க ஏன் ஆசை?”

“அவர்களில் ஒருத்தியாக வாழ்ந்து மனித வாழ்க்கையை புரிந்து கொள்ள நினைக்கிறேன்! ஏன் இப்படி பாரபட்சமில்லாமல் எல்லா மக்களும் பேராசையுடனும், சுயநலத்துடனும், தீராத பகையுடனும் வாழ்கிறார்கள் என்பதை நேரடியாக அனுபவித்து அறிந்து கொள்ள நினைக்கிறேன்! அவர்களுக்கு பிறப்பின் நோக்கை கற்பித்து சரியான வாழ்க்கைப் பாதையை காட்டிட விரும்புகிறேன்”

சிவன் இப்போது பார்வதியை சற்றுக் கவலையாக பார்த்தார் “உனக்கும் ஒரு திருவிளையாடல் தேவையா? இதற்கு முன் பலமுறை பூலோகத்தில் பிறந்து என்னை மீண்டும் அடைந்திருக்கிறாயே? அப்போது புரிந்து கொள்ள முடியாததை இப்போது மட்டும் எப்படி சாதிக்கப் போகிறாய்?”

பார்வதி சற்று நிதானித்தாள். இதற்கு எப்படி பதில் சொல்வது என்று யோசித்தாள். குரலை செருமிக் கொண்டு தன் கணவரை நிமிர்ந்து பார்த்தாள் “சிவபெருமானே! தாங்கள் கோபப்படாமல் இருந்தால்

சொல்கிறேன். நான் முன்பு எடுத்த பிறவிகளெல்லாம் ஏதேதோ காரணங்களால் தங்களை பிரிந்து பின் தங்களிடமே மீண்டும் வந்து சேரும் காரியத்திற்காகவே நடை பெற்றன. அதே போல, சில பிறவிகள் துஷ்டர்களை அழிப்பதற்காக எடுத்தவை. காரியம் முடிந்ததும் தங்களிடம் சேர வேண்டி தவம் செய்யும் பொறுப்பு. ஆகையால் அந்த பிறவிகளில் ஒன்றில் கூட எனக்காக என் விருப்பத்தேற்ப நான் வாழ்ந்ததில்லை. பிறப்பின் நோக்கமே தங்களை மீண்டும் அடைய வேண்டியே என்றானபின், எனக்கு அதைத் தவிர வேறு எதிலும் எப்படி கவனம் சென்றிருக்க முடியும்? அதிலும் அந்தப் பிறவிகள் ஒவ்வொன்றும் தங்களின் திருவிளையாடலை உலகத்திற்கு பறை சாற்றவேண்டி உருவாக்கப்பட்டவைதானே? நானும் அதில் ஒரு பாத்திரம்தானே!”. சட்டென்று பார்வதி தன் குரலைத் தழைத்துக் கொண்டு “நான் சொல்வதில் ஏதேனும் தவறிருந்தால் என்னை மன்னிக்க வேண்டுகிறேன்”

சிவன் அவளைக் கனிவுடன் பார்த்தார். மெல்ல அவள் தோளை அணைத்து அவள் தலையை தன் மார்பில் சாய்த்துக் கொண்டார்.

“தேவி! உனக்கும் வேதனையா? அதிலும் என்னிடம் உன் மனதில் உள்ளதை சொல்லத் தயக்கமா? பயமா? நீ என்னில் பாதியானவளாயிற்றே! உன் முன் பிறப்புகளில் நீ மற்ற மனிதர்களைப்போல எந்த கர்ம வினையிலும் மாட்டிக்கொள்ளாமல் எடுத்த அதே பிறப்பில் என்னை மீண்டும் வந்தடைய வேண்டியே அப்படி ஒரு சூழல் உனக்கு உண்டானது. அப்படி இல்லாமல் நீயும் கர்ம வினைகளில் உழன்று விட்டால் பின் பல பல ஜென்மங்கள் எடுத்துதான் என்னை அடைந்திருக்க முடியும். இப்போது புரிந்ததா?” பரிவுடன் அவள் தலையைத் தடவினார் சிவன்.

“அப்படி என்றால் எனக்கு ஒரு வரம் வேண்டும் பிரபு!”

“வரமா? என்னைச் சிக்கலில் மாட்டி விடப் போகிறாயா? பெண்களே இப்படித்தான். கொஞ்சம் காதலையும், அன்பையும் காட்டிவிட்டால் போதும். உடனே வரம் அல்லது அறிவுரை! அப்பப்பா! அதில் இருந்து மீளவா முடியும்? கேள் தேவி! கேட்பதெற்கென்ன?”

“தங்களுக்கு எப்போதும் விளையாட்டுத்தான்! எனக்கு ஒரு முறை மனித ஜன்மம் எடுத்து அவர்கள் வாழ்க்கையை நான் முழுதுமாக வாழ வேண்டும். தங்களை மீண்டும் அடைவதற்காகவே தவம் செய்து கொண்டிராமல், மக்களோடு மக்களாய் வாழ்ந்து, அவர்களைப் புரிந்து, அவர்களுக்கு நல் வழி காட்டி, பின் எந்த குறையுமில்லாமல் எந்த கர்ம வினையிலும் மாட்டிக்கொள்ளாமல் தங்களை மீண்டும் வந்தடைய வேண்டும். அவ்வளவுதான்!”

சிவன் இப்போது சத்தமிட்டு சிரித்தார் “பலே! பலே! மனித வாழ்க்கையின் தத்துவத்தை உனக்காக மாற்றச் சொல்கிறாய்? எத்தனை வினைகள் செய்தாலும் அதில் எதிலும் மாட்டிக் கொள்ளாமல் நேரே என்னிடம் வந்து விட வேண்டும். நல்ல எதிர்பார்ப்பு! செய்ய வேண்டிய கடமையை சரியான சமயத்தில் செய்யாமல் பணம் இருக்கின்ற காரணத்தினாலேயே லஞ்சம் கொடுத்து தகுதி இல்லாவிட்டாலும் வேண்டிய காரியத்தை சாதித்துக் கொள்ளும் மனிதர்களைப் போல அல்லவா நீயும் என் அருகாமையின் பலனால் இப்படி தத்துவத்தை மீறிய செயலை வேண்டுகிறாய்?”

பார்வதிக்கு இப்போது உண்மையிலேயே கோபம் வந்து விட்டது. சிவனிடமிருந்து சற்று தள்ளி அமர்ந்து கொண்டாள்.

“பரிகாசமா? இது தேவையா? நான் என்ன சுயநலத்திலா அப்படி வேண்டினேன்? இங்கேயே சுகமாக இருப்பதை விட்டு விட்டு, மனித ஜென்மம் எடுத்து ஏன் கஷ்டப்பட நினைக்க வேண்டும்? என் உயர்ந்த நோக்கத்தை ஈஸ்வரனாகிய தங்களாலேயே புரிந்து கொள்ள முடியாதா? நீங்களும் ஒரு சராசரி மானிட கணவன் போல்தான் பேச வேண்டுமா?”

“உடனே கோபமா? நான் உன்னை சோதிக்காமல் உடனடியாக உன் கோரிக்கைக்கு தலையசைத்துவிட்டால், யாராவது சிவபெருமானே பாரபட்சமாக நடக்கிறார் என்று புகார் செய்துவிடுவார்கள். அது மட்டுமல்ல! பார்வதிக்கு பண்ணியதுப்போல் எங்களுக்கும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் லஞ்சமும் கொடுக்க முயற்சிப்பார்கள். நான் பலவற்றையும் யோசனை செய்ய வேண்டுமல்லவா? அதனால்தான் உன்னை சோதித்தேன்”

“இப்போது திருப்தியா? எனக்கு வரம் கிடைக்குமா?”

சிவன் தன் புன் சிரிப்பை மறைத்துக்கொண்டு ஆழ்ந்த சிந்தனையோடு கூறினார் “தேவி! உன் வேண்டுகோள் சற்று சிரமமானது. நீ அதில் மிக கவனமாக இருக்க வேண்டும். மனிதப் பிறவி போல் வாழ வேண்டுெமன்றால் நீ யார் என்பதை மறந்திருக்க வேண்டும். உன் சத்தியம் உன் நினைவில் இருக்கும். உன்னால் அதை உணர முடியும். ஆனால் உன் சக்தியை பயன் படுத்த முடியாது. விஷ்ணு தன் இராம அவதாரத்தில் வனவாசம் சென்று மாயமானை அறியாமல் சீதையை பிரிந்து துன்பப்பட்ட நிலைபோல் வந்தாலும், உன்னால் உன் சக்தியை உபயோகித்து கஷ்டங்களிலிருந்து மீள முடியாது. அப்படி உன் சக்தியை மறக்காமல் இருக்க வேண்டுமானால் உன்னால் மனிதப் பிறவியாக அவர்களைப் போல வாழ முடியாது. உன் சத்தியத்தால் மட்டுமே உன்னால் நீ நினைப்பதை சாதிக்க முடியும். ஆனால் அதற்கு உன் தளராத முயற்சியும், நம்பிக்கையும் வேண்டும். அது இல்லையென்றால், நீ சத்தியம் மீறி மானிட கர்ம வினைகளில் சிக்கிக் கொள்வாய். புரிகிறதா? உன்னால் முடியுமா?”

பார்வதி தன் கணவரைக் கூர்ந்து கவனித்தாள். இதுவும் ஒரு விளையாட்டோ அல்லது சோதனையோ என்று சிந்தித்தாள். ஆனால் சிவன் தன்னை கவலையுடன் கவனிப்பது கண்டு அமைதியாகி கேட்டாள் “அப்படி ஒரு நிலை வந்தால், நீங்கள் என்னை எச்சரிக்கை செய்ய மாட்டீர்களா?”

சிவன் வேதனையுடன் தலையசைத்தார் “இல்லை தேவி! உன் விருப்பத்திற்கேற்ப மனிதப் பிறவியாக நீ வாழ்ந்தால், என்னை உன் சத்தியத்திற்கு உட்பட்டு உணர்த்தத்தான் முடியும். அதை உணர்வது உன் செயலைப் பொறுத்துதான் இருக்கிறது”

பார்வதி சோர்வடைந்தாள் “நான் ஒரு நல்ல காரியம் செய்யத்தானே நினைக்கிறேன். ஏன் இப்படி ஒரு சோதனை?”

சிவன் அவள் தோளைத் தட்டினார் “அதற்கு ஒரே வழி! உன் அவதாரமாக பூமியில் பிறப்பெடு. அப்போது இந்த சோதனையில் மாட்ட மாட்டாய். உனக்கு எல்லாம் புரியும். உன் சக்தியும் உன்னிடம் முழுமையாக இருக்கும்”

பார்வதி உடனே தலையசைத்தாள் “வேண்டாம் சுவாமி! அப்படிப்பட்ட அவதாரத்தில் நான் மனிதப்பிறவிகளின் உண்மை நிலையை உணரவே முடியாது. எப்போதும் என் நிலை தெரிந்து நான் முழுமையாக இருப்பதால், என்னால் அவர்கள் வாழ்க்கையை வாழ முடியாது. அது மட்டுமல்ல! என் சக்தியை காண்பவர்கள் உடேன ஒரு கோயிலில் அல்லது மண்டபத்தில் உட்கார வைத்து குறி சொல்ல நிர்ப்பந்திப்பார்கள். நான் ஒரு காட்சிப் பொருளாய் மட்டுமே மாறிப்போவேன். ஆகவே அது போன்ற அவதார நிலை வேண்டாம். நான் நினைப்பது போல் மனிதப் பிறவியாய் ஜன்மம் எடுக்க வேண்டும். அதே நேரத்தில் நான் பிறவி முடிந்தவுடன் எப்போதும் போல் பல்லாயிரம் வருடங்கள் தவம் செய்யாமல் தங்களை உடனடியாக வந்தடைய வேண்டும். அதற்கு வழி கூறுங்கள்”.

சிவன் யோசித்தார். இந்த வினையிலிருந்து ஒரு புது அனுபவத்திலிருந்து பார்வதி வெளிேயற வழியேயில்லை என்று உணர்ந்தார்.

“சரி தேவி! நீ கேட்டபடி வரம் தருகிறேன். ஆனால் நினைவில் கொள். உனக்கு உன் சத்திய நிலையை உணர முடியும். ஆனால் உன்னால் உன் சக்தியை உபயோகிக்க முடியாது. அதனால் இன்பமோ, துன்பமோ எது வந்தாலும் அதை நீ ஒரு மானிடப் பிறவி போலவே கையாள வேண்டும். என்னால், என் உணர்வினால் உன் சத்திய நெறி மூலம் நீ வழி தவறி போகாமல் உன்னைக் காக்கவும், எச்சரிக்கவும் மட்டுமே முடியும். உன் மனித வாழ்வு முடியும்போது நீ என்னை வந்தடைவாய். ஆனால் ஒன்று. உனக்கு

வினைகளில் மாட்டாத இது போன்ற பிறப்பு ஒரே ஒரு முறை மட்டுமே கிடைக்கும். ஆகவே எது செய்தாலும் யோசித்து செய்” என்று பார்வதியை ஆசீர்வதித்தார்.

பார்வதி அவரை வலம் வந்து வணங்கி விடை பெற்றாள்.

பார்வதி தமிழ்நாட்டின் காவிரிக்கரையோரம் வந்து சேர்ந்தாள். அவள் கண்களும் உணர்வும் ஒரு தக்க தருணத்தையும், சரியான பிறப்பின் மூலத்தையும் தேடிக்கொண்டிருந்தன. அப்படி ஆகாய வெளியில் அவள் பறந்தபடி தேடிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறிய கிராமத்தின் மூலையில் இருக்கும் ஒரு குடிசையின் உள்ளில் இருந்து முக்கல்களும், “அம்மா! மகமாயி! பொறுக்க முடியலையே!” என்ற கூக்குரல்களும் கேட்டன. பார்வதி அக்குடிசையின் உள்ளே நுழைந்தாள்.

ஒரு பெண் பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருக்க, அவளைச் சுற்றி மூன்று பெண்கள் அவளுக்கு உதவிக் கொண்டிருந்தனர். எந்த நேரத்திலும் அந்தப் பெண்ணிற்கு பிரசவம் நடந்து விடுமென்று பார்வதிக்கு புரிந்தது. அவள் உடேன சூழ்நிலையை உற்றுக் கவனித்தாள். சிறு கிராமம். ஏழைப் பெண். கல்வி அறிவில்லாத உழைக்கும் சமூகம். தன் பிறப்புக்கும், தன் முயற்சிக்கும் இதுதான் ஏற்ற நிலை என்று தீர்மானித்தாள். தன் இறைவனை வேண்டினாள். பின் அந்தப் பெண்ணின் மூச்சு வழியாக அவள் கருப்பையில் நுழைந்தாள். அங்கு ஒரு கரு உயிர் பெற்று வெளியே போகத் துடித்துக்கொண்டிருந்தது. அந்த உயிர் இருட்டான கருப்பையில் திடீெரன உண்டான பிரகாசத்தை பார்த்து மயங்கியது. வெருண்டது.

பார்வதி அதன் பதற்றத்தை தணிக்க முயன்றாள். “ஜீவனே! நான்தான் அகிலம் ஆளும் பராசக்தி. பயப்பட வேண்டாம். நான் உனக்குப் பதிலாக இவள் கருவின் மூலம் உலகில் பிரவேசிக்க விரும்புகிேறன். அதனால் நீ இதிலிருந்து போய்விடு” என்றாள்.

அந்த ஜீவன் இப்போது சிரித்தது “பராசக்தியே! உன்னை வணங்குகிறேன். உன்னிடம் ஒரு கேள்வி! என் விதிப்படி நான் இந்த கருப்பையின் மூலம் உலகில் பிறந்து என் கர்மவினைகளை கழிக்க வேண்டும். அதுவே நீ விதித்ததுதானே! நான் இங்கிருந்து சென்றால், என் செய்வேன்?”

பார்வதி அதைக் கருணையுடன் நோக்கினாள் “கவலைப் படாதே! நீ இந்த ஜன்மத்தில் முடிக்க வேண்டிய வினைகள் முழுதும் இப்பொழுதே முடிந்ததாக வரம் அளிக்கிறேன். எனக்கு இடம் அளித்து நீ விலகு” என்றாள்.

ஜீவன் பரவசமடைந்தது “என் பாக்கியம் தேவி! ஆனால் என்னை விலக்கி நீ ஏன் இந்த பிறவி எடுத்து மனித ஜன்மமாகின்றாய்? ஏன் எலிப்பொறியில் மாட்டிக்கொள்கிறாய்? இதுவும் ஒரு அவதாரமா? என்னையும் உன்னிடேம வைத்துக்கொள்ளேன். என் ஜன்மமாவது முக்தியடையும்”

“என் எண்ணம் வேறானது. நான் இப்போது எடுப்பது அவதாரமல்ல. மானிடப் பிறவிகளை அவர்களில் ஒருத்தியாகவே இருந்து உயரச் செய்வது. ஆகவே இங்கு பிறப்பதுதான் சரி. ஆகவே நீ சீக்கிரம் விலகு” என்றாள்.

அந்த ஜீவன் வெளியேறியதும், பராசக்தி அந்தப் பிண்டத்தின் உயிரானாள். அதே நேரத்தில் அவள் சக்தி மறைந்து ஒரு சாதாரணப் பிறவியானாள். அவளின் சத்தியம் மட்டும் அவள் உணர்வில் கலந்து நின்றது. அவள் தன்னை உணர்ந்தாள். ஆனால் சக்தியற்று வெறும் உயிராக இருந்தாள்.

அந்தப் பெண்மணி வீறிட்டாள்.

பராசக்தி ஒரு மானிடப்பெண்ணாக வெளிப்பட்டாள். அழுதாள்.

அவளை சுற்றி கூக்குரல்கள் எழுந்தன.

“புள்ள பிறந்திடுச்சு”

“பொட்டைப் பிள்ள”

“அவ புருஷனைக் கூப்பிடு”

“இந்தா பிடி! பொறந்தவுன்னே அழுது பாரு!”

“என்னாத்தா! என்ன ஆச்சு?”

“வாடா என் மவனே! நல்லா பெத்துப் போட்டிருக்கா பாரு பொட்டப் புள்ளைய!”

“அடக் கடவுளே! ஏன் இப்படி ஆச்சு? ஆம்பளையை இல்லே எதிர்பார்த்தோம்”

கடவுளே வந்து பிறந்திருப்பது தெரியாமல் அவன், பராசக்தியின் தகப்பன் புலம்பினான். அவன் தாய் அழுதாள். அவளைப் பெற்றவள் இன்னும் மயக்கமாக கிடந்தாள். அவளின் சத்தியம் அவளைச் சுற்றி நடப்பதை உணரச் செய்தது. பராசக்தி தன்னை சுற்றிலும் பார்த்தாள். தான் யாரென்பதை எப்படியாவது சொல்ல முடியுமா என்று யோசித்தாள். ஆனால் அவளால் அழுவதை தவிர வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. முதன் முதலாக ஒரு சிறிய பயம் அவளைக் கவ்வியது.

“இப்ப என்னடா பண்றது? அம்மாக்காரி முழிக்கறதுக்குள்ளே ஏதாவது செய்தால்தான் உண்டு. சீக்கிரம் சொல்லித்தொலை”

அவன் முழித்தான். தைலைய அழுந்த பிடித்துக் கொண்டான் “என்னை சும்மா விடுங்க”

பராசக்தி இன்னும் அழுதாள். அவர்கள் கவனத்தை இன்னும் இழுத்தாள்.

“யாராவது அதன் கத்தலை நிப்பாட்டுங்களேன்! ஏன் இப்படிக் கத்துது?”

“லூசு! அதுக்குப் பசிடா! அம்மாக்கிட்டே பால் குடிக்கணும். சொல்லு சீக்கிரம். பால் குடிக்க விடவா இல்லை பச்சம்மாவை கூப்பிடவா?”

“ஏம்மா! ஏன் இவ்வளவு அவசரம்? எதுக்கு பச்சம்மா?”

“இந்த பொட்டையை வச்சுக்கிட்டு என்ன பண்ணப்போற. சாவற வரைக்கும் உனக்கு செலவுதான். ஏண்டா தலைவலி? ஆம்பளை வேணும்தானே கேட்டிட்டிருந்தே. அதான் ஏமாத்திபுட்டாளே. முடிச்சுடு. அவ எழுந்திரிக்கிறதுக்குள்ளே பச்சம்மா கச்சிதமா அமுக்கிடுவா. என்ன சொல்ற?”

பராசக்திக்கு புரிந்தது. தான் பெண்ணாகப் பிறந்தது அவர்களுக்கு தேவையில்லை. தன்னைக் காப்பாற்றக்கூடியது அவள் தாய்தான் என்றுணர்ந்தாள். ஆனால் அவளோ இன்னும் மயக்கத்தில் கிடந்தாள். அவளை எழுப்ப பராசக்தி இன்னும் வேகமாக அழுதாள். ஆனால் அது அவர்களின் கோபத்தைத்தான் தூண்டியது.

“இப்பவே எப்படி அழிச்சாட்டியம் பண்றது பார் கழுதை! பொட்டையா பிறந்திட்டு இப்பவே ஆரம்பிச்சிடுத்து” அவளைக் கரித்தனர்.

அவன், அவள் தகப்பன் சுவரில் மாட்டியிருந்த மாரியம்மன் படத்தை கையெடுத்து கும்பிட்டான். “தாயே என்னை மன்னிச்சுடு! ஒரு பொண்ணை வளர்க்க எனக்கு திராணியில்லை. அடுத்த வாட்டி எனக்கு

ஆம்பள குழந்தயை கொடு”. திரும்பினான். “சரிம்மா! பச்சம்மாவை கூப்பிடு” அவன் முகத்தை மூடிக்கொண்டே அந்தக் குழந்தையின் மரணத்திற்கு ஆணையிட்டான்.

பராசக்தி கதறினாள். “டேய்! நாந்தான்டா அந்தப் படத்தில் இருக்கும் மாரியம்மன். நான் உன் மகளா வந்தா உனக்கும் தாண்டா முக்தி! வேண்டாம்டா என்னைக் கொல்ல சொல்லாதே” ஆனால் அவள் சத்தம் அவளுக்கு மட்டும்தான் புரிந்தது. மற்றவர்களுக்கு அது அழுகையாகத்தான் கேட்டது.

பராசக்தி தன் இறைவனை சிவபெருமானை நினைத்தாள். வேண்டினாள். ஆனால் அவரின் உணர்வினால் அவள் தன் சத்தியத்தை மட்டுேம அறிந்து கொள்ள முடிந்தது. செய்வதறியாது உலக மாதா திகைத்தாள்.

பச்சம்மா உள்ளே நுழைவதைக் கண்டாள். அவள் எதனையோ தன் மூக்கில் திணிப்பதைக் கண்டாள். பின் தன் தலையை ஒரு துணி மூடியதை உணர்ந்தாள். அவளுக்கு மூச்சு முட்டியது. காற்றுக்கு அந்த ஆகாயவெளியையே வீடாக கொண்டவள் அலைந்தாள். அவள் கண்கள் சொருகியது. அவள் உணர்வு மயங்கியது. தன் மனிதப்பிறவி முடிவுக்கு வருவதை உணர்ந்தாள். மானிடர்களின் அறியாமையை, ஆணவத்தை, அல்பத்தனத்தை தான் விரும்பியபடியே ஒரு மனிதப்பிறவியாய் பிறந்து அறிந்தாள். இவர்களை யாரும் கரேயற்ற முடியாதென்று தெரிந்து கொண்டாள். மானுடம் படும் துயரம் அவர்களாலேயே உண்டானது என்றும் அதை அவர்களே பல பல ஜன்மங்கள் எடுத்து, அனுபவித்து, வினை கழித்து பின்னர்தான் இறைவனை அடைய முடியும் என்றும் உணர்ந்து கொண்டாள். தன்னை வேண்டுபவர்களுக்கும் கும்பிடுபவர்களுக்கும் தன்னில் இஷ்டமில்லை என்றறிந்தாள். கண்ணீருடன் அக்குழந்தையின் உடலைப் பிரிந்தாள். ஆகாய வெளியில் பறந்தாள். தன் இறைவனுடன் கலந்தாள்.

அந்த குடிசையிருந்த தெரு மூலையில் ஒரு டீக்கடையில் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது “பெண்தான் உலகில் தெய்வம். அவள் இல்லையேல் உலகம் ஒரு நரகம்…”

உலகம் எப்போதும் போல் துன்பத்திலும் இன்பத்திலும் உழன்று கொண்டிருந்தது. கோயில்களில் கூட்டம் அதிகமாகிக் கொண்டேயிருந்தது. அரசு 1000 ஆண்களுக்கு 914 பெண்கள்தான் உள்ளனர் என்று கவலைப் பட்டுக்கொண்டிருந்தது.

Share Article :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *