மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அதனினும் அரிது
வறுமை இல்லா இளமையும் நோயில்லா முதுமையும்
கல்வியும் ஞானமும் வீரமும் விவேகமும்
நல்ல துணையும் வற்றாதசெல்வமும் வாடாத குணமும்
அமையப் பெற்றால் அது பிறத்தலை விட அரிது….
கட்டைவிரலும் ஆட்காட்டி விரலும் கொடும் வித்தை
விரல்களால் கைகள் செய்யக்கூடிய செயல்கள்
கற்பனையும் எதிர்கால கேள்வியும் கடந்த கால ஆராய்ச்சியும்
மொழியும் எழுத்தும் எண்ணமும் பேச்சும் ஆடலும் பாடலும்
மேல் கீழ் இடது வலது காணும் கண்களும்
மானிடருக்கே உரித்தான விந்தைகள்
ஆகவே மானிடராய் பிறத்தல் அரிதிலும் அரிது…..
சிந்தனையும் தத்துவமும் அறிவியலும் ஆன்மீகமும
மதமும் சாதியும் உயர்வும் தாழ்வும்
புன்னகையும் சிரிப்பும் அழுகையும் ஆனந்தமும்
காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் காதலைப் பரிமாறுவதும்
உருவாக்குவதும் அழிப்பதும் தேடுவதும் கேட்பதும்
மானிடருக்தே உரித்தான விந்தைகள்
ஆகவே மானிடராய் பிறத்தல் அரிதிலும் அரிது….
கவிதையும் தாளமும் சுருதியும் ராகமும்
சாம்பாரும் ரசமும் வத்தக்குழம்பும் ஆட்டு பிரியாணியும்
வீடும் காரும் பாலமும் இரயிலும்
காமம் உண்டாயின் எந்நேரமும் துணையை இணைய மார்க்கமும்
கரு வேண்டாமெனில் கரு கலைக்க உரிமையும் தொழில்நுட்பமும்
மானிடருக்கே உரித்தான விந்தைகள்
ஆகவே மானிடராய் பிறத்தல் அரிதிலும் அரிது,….
ஆணவமும் அகங்காரமும் கோபமும் வெறுப்பும்
துரோகமும் வஞ்சகமும் வன்முறையும் பொய்மையும்
கொலையும் கொடுரமும் சாதியும் பேதமும்
அடிமைத்தனமும் கோழைத்தனமும் பயமும் பேதமையும்
மதமும் மதத்தால் பிரிவினையும் வெறுப்பு அரசியலும்
மானிடருக்கே உரித்தான விந்தைகள்
ஆகவேமானிடராய் பிறத்தல் அரிதிலும் அரிது,……….
எப்படி வாழ்ந்தாலும் மானிடராய் பிறத்தலரிது…
மறு ஜென்மம் கேள்விதான் உண்மை யாரும் அறியார்
மானிடராய் பிறந்த இந்த ஒரு ஜென்மம் எதனைக் காட்டிலும் பெரிது
அதை வீணாக்காமல் இந்த பரந்த உலகையும் பிரபஞ்சத்தையும் காதல் கொள்…
முன்னேற்றம் பணமோ பதவியோ அதிகாரமோ செல்வமோ அல்ல
முன்னேற்றம் ஒரு பரிணாம வளா்ச்சி அதுவே மானிடம் உருவான மார்க்கம்
இன்று மானிடமாய் பரிணாம வளர்ச்சி கண்ட நாம்
நாளை பன்மடங்காய் பரிணாமம் அடைய பிரபஞ்சம் வகுத்த இயற்கையோடு ஒன்றி வாழ்வோம்….
அது மட்டுமே நாம் இறைமையை அடைய வழி!