Newsletter

Make sure to subscribe to our newsletter and be the first to know the news.

புத்தகங்கள்

அறைகள்

தனது மேஜையில் ஆத்தியப்பன் ரிஜிஸ்தரை வைத்து விட்டுப் போகும்வரை அந்த யோசனை தோன்றவேயில்லை. திடீரென்று தான் மனதில் உருவானது.

எதற்காக மானைப் பார்க்க வேண்டும் என்று புரியவில்லை. ஆனால் மனதில் மானைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாகக் கொப்பளிக்கத் துவங்கியது. இப்படி யாருக்காவது விசித்திரமான எண்ணம் வருமா என்ன… தன்னைச் சுற்றிலும் இருந்த சக ஊழியர்களைத் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.

மின்வாரியத்தின் நிர்வாகப் பிரிவு அலுவலகமது. காரை உதிர்ந்து கொண்டிருக்கும் அந்தப் பழைய கட்டிடத்தின் இரண்டாவது மாடியிலிருந்த பெரிய ஹாலில் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

வலது புறம் நேராக நடந்து போனால் உயரதிகாரிகளின் அறைகள். அதை ஒட்டியது போல காப்பறை. கடந்து போனால் கீழும் மேலுமாகச் செல்லும் சிமெண்ட் படிக் கட்டுகள். அலுவலகத்தில் மொத்தம் முப்பத்தியெட்டு படிகள் இருக்கின்றன.

தேவபிரகாஷ் பலமுறை அப்படிகளை எண்ணியிருக்கிறார். அலுவலகத்திற்கு வந்த புதிதில் அப்படி எண்ணுவது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. ஆனால் இப்போது படிகள் இருப்பதே கண்ணிற்குத் தெரிவதில்லை. கால்கள் தானாகவே ஏறிப்போய்விடுகின்றன. ஒருவேளை தன்னைப் போல புதிதாக வேலைக்குச் சேர்ந்த எவராவது படிகளை எண்ணக்கூடும்.

இடது பக்கம் நீளும் வழி எப்போதுமே இருட்டடிந்து போயிருக்கிறது. மோகன்குமார் உட்கார்ந்திருக்கும் இடத்தின் அருகில் உள்ள ஜன்னலை ஒட்டி ஒரு வாதாமர மிருக்கிறது. ஆனால் அதன் இலைகள் அசைவதேயில்லை. தூசிபடிந்து, வெளிறிப்போன நிலையில் ஒரு நோயாளி யைப் போல அந்த மரம் நின்று கொண்டிருக்கிறது.

அரசு அலுவலகத்தின் ஊடாக ஒரு மரமாக இருப்பது துரதிருஷ்டமானது. யாரும் தண்ணீர் ஊற்ற மாட்டார்கள். மரத்தின் மீது பாக்கு போட்டு கோழையுடன் வழியும் எச்சிலைத் துப்பியிருப்பார்கள். மூன்றாவது மாடியில் வேலைசெய்பவர்கள் சாப்பிட்டு மிச்சமாகித் தூக்கி எறியப்பட்ட உணவுகள் யாவும் மரத்தின் மேலாகத்தான் விழுந்திருக்கின்றன. அந்த மரத்தில் இருந்து ஒரு அணில் அலுவலகத்திற்குள் வந்துவிடுகிறது என்று சொல்லி புனிதவல்லி எரிச்சல்பட்டு பெரிய கிளை ஒன்றை வெட்டிவிடச் செய்தாள். அதன் பிறகு அந்த அணில் வருவதும் நின்று போய்விட்டது.

அந்த அலுவலகம் பரபரப்பாகச் செயல்பட்டு அவர் அறிந்ததேயில்லை. அது போலவே அலுவலகத்தில் வேலை செய்யும் அனைத்து ஊழியர்களும் ஒருநாளும் முழுமையாக வந்ததேயில்லை. தினமும் நாலைந்து காலி இருக்கைகள் கண்ணில் படுகின்றன. அதிலும் சுந்தரவதனி என்ற பெண் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுப்பில் இருக்கிறாள். அவளது இருக்கை அப்படியே இருக்கிறது. அந்த மேஜை மீது கோப்புகள் தூசி படிந்து கிடக்கின்றன. சுந்தரவதனிக்கு என்ன செய்கிறது. ஏன் ஒருவரும் அவள் வீடு தேடிப்போய் பார்த்து வந்ததேயில்லை. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருமுறை இது போன்ற மதிய நேரம் அந்த எண்ணம் அவரை உந்தத் துவங்கியது.

உடனே கிளம்பி சுந்தரவதனியைப் போய் பார்த்து விட்டு வரவேண்டும் என்று மனக்குரல் ஆவேசமாகச் சொல்லத் துவங்கியது. ஏடிஎம் போய் பணம் எடுத்துவர வேண்டும் என்று உயரதிகாரியிடம் பொய் சொல்லிவிட்டு அன்பு பீறிட சுந்தரவதனி வீடு இருந்த ராமாவரத்திற்கு ஆப்பிள் பழங்களுடன் போயிருந்தார்.

அலுவலகத்தில் சுந்தரவதனி எப்போதுமே தலைவலி தைலத்தை தேய்த்துக் கொண்டு கடுமையான முகத்தோடு தானிருப்பாள். ஒரு மழை நாளில் அவர் ஏறிய ஷேர் ஆட்டோவில் அவளும் உடன் பயணம் செய்தாள். அப்போது தனது வீடு ராமாவரத்தில் உள்ளதாகத் தெரி வித்திருந்தாள். அதைத் தவிர அவளோடு அதிகம் பேசிப் பழகியதில்லை.

ராமாவரத்தில் அவளது வீட்டை விசாரித்துக் கண்டுபிடிப்பது சிரமமாகவே இருந்தது. இரும்பு கேட் போட்ட பெரிய வீடு. வீட்டின் முகப்பில் எண்டோவர் கார் நின்றது. இவ்வளவு வசதியானவள் என்பதை அவள் காட்டிக் கொள்ளவேயில்லையே என்று தோன்றியது. காலிங்பெல்லை அடித்தபோது சுந்தரவதனி நைட்டியுடன் வந்து கதவைத் திறந்தாள்.

அவர் வரக்கூடும் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவரைப் பார்த்த மாத்திரம் திகைத்துப் போனவளாக சோபாவில் உட்காரச் சொன்னாள்.

‘என்ன பேசுவது?’ என்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தார்.

‘என்ன விஷயம்?’ என விருப்பமற்ற குரலில் கேட்டாள்.

‘சும்மா பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன்’ என்றார் தேவபிரகாஷ்.

அவள் அதை நம்பமுடியாதவள் போல ‘ஏதாவது கடன்கிடன் வேணுமா?’ என்று நேரடியாகக் கேட்டாள்.

‘அதெல்லாமில்லை. ஆறுமாதமாக நீங்க ஆபீஸ் வரவில்லையே… அதான்’ என்று சமாளித்தார்